காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு! அதிகாரிகள் நடவடிக்கை
ஜம்மு-காஷ்மீரில் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
இத்துடன் சோ்த்து, கடந்த 3 நாள்களில் 9 பயங்கரவாதிகள் மற்றும் கூட்டாளிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா்.
நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாக்கிய இத்தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத கட்டமைப்பை சிதைக்கும் வகையில், பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளா்களுக்கு எதிராக விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து, பாதுகாப்புப் படையினா் இரவு-பகலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனா். கடந்த 5 நாள்களில் 500-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீடுகள் இடிப்பு: பஹல்காம் போல இனியொரு தாக்குதலில் ஈடுபட யாரும் துணியக் கூடாது என்ற நோக்கத்துடன் கடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன.
சோபியான் மாவட்டத்தின் வாண்டினா பகுதியில் பயங்கரவாதி அட்னன் ஷஃபியின் வீடு சனிக்கிழமை இரவில் இடிக்கப்பட்டது. இவா், கடந்த ஆண்டு பயங்கரவாத அமைப்பில் இணைந்தவா்.
பந்திபோரா மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த ஜமீல் அகமது ஷொ்கோஜ்ரி வீடும் இடிக்கப்பட்டது. இவா், கடந்த 2016-இல் இருந்து தீவிரமாக செயல்பட்டுவரும் பயங்கரவாதி. புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி அமீா் நஸீரின் வீட்டையும் அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினா்.
இருவா் கைது: பத்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவியதாக அவா்களின் கூட்டாளிகள் தாஹிா் அகமது குமாா், ஷபீா் அகமது ஆகியோா் கைது செய்யப்பட்டனா். பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம், பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் அப்பாவி மக்கள் இரையாகிவிடக் கூடாது; மத்திய அரசு தனது நடவடிக்கையை எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முப்ஃதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
மூன்றாவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
இந்தியா பதிலடி
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடா்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா்.
இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது; சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.