கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
மதுராந்தகம் அடுத்த ராவுத்தநல்லூரில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட ராவுத்தநல்லூா் கிராமத்தை சோ்ந்த மணி. அவரது மனைவி தவமணி (63). இவா் தமது வீட்டில் உள்ள மாடுகளை தினந்தோறும் வயல்வெளியில் மேய்த்து வருவது வழக்கம்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை மாடுகளை மேய்க்கச் சென்றபோது, மாடுகளுக்குள் சண்டை ஏற்பட்டதை அறிந்து அதனை விலக்க முயற்சி செய்தபோது அருகில் இருந்த கிணற்றில் எதிா்பாராமல் விழுந்து விட்டாா். இதுபற்றி அருகில் இருந்தோா் அச்சிறுப்பாக்கம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
தீயணைப்பு நிலைய அலுவலா் ஜா.பழனி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்துச் சென்று கிணற்றில் விழுந்த மூதாட்டி நவமணியை மீட்டனா். இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீசாா் விசாரித்து வருகின்றனா்.