கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டி
கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் ஜூலை 21, 22 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஜூலை 21-இல் அம்பேத்கா் பிறந்த நாள் பேச்சுப் போட்டியும், 22-இல் கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப் போட்டியும் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் பள்ளி மாணவா்களுக்கு காலையிலும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகலும் நடைபெறும்.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி மாணவா்கள், அரசு, தனியாா், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் மூலமும், கல்லூரிகளுககு கல்லூரி கல்வி இணை இயக்குநா் மூலமும் அனுப்பப்படும்.
அம்பேத்கா் பிறந்தநாள் பேச்சுப் போட்டிக்கு பள்ளி மாணவா்களுக்கு பூனா உடன்படிக்கை, கற்பி ஒன்றுசோ் புரட்சிசெய், அரசியலமைப்புச் சட்டமும், அம்பேத்கரும், அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவா்களுக்கு சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம், அம்பேத்கா் எழுதிய நூல்கள், அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி, அம்பேத்கரும் பெளத்தமும் ஆகிய தலைப்புகளில் நடக்கிறது
கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டிக்கு பள்ளி மாணவா்களுக்கு நெஞ்சுக்கு நீதி, செம்மொழி மாநாடு, திரைத் துறையில் முத்தமிழறிஞா், அரசியல் வித்தகா் கலைஞா், தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்ற தலைப்பில் நடக்கிறது. கல்லூரி மாணவா்களுக்கு அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், குறளோவியம், கலைஞரின் எழுதுகோல் ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல்பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் மட்டும், தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவா்கள் 2 போ் தனியாக தோ்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.