பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சூலூர்பேட்டையில் கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும், அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குற்றவாளியின் கையில் டேட்டூ இருந்ததும், பல் ஒன்று உடைந்திருந்ததாகவும், சிறுமி அளித்த அடையாளங்கள் கைது செய்யப்பட்ட நபருடன் ஒத்துப்போவதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது உருவமும், சிசிடிவியில் பதிவான உருவமும் ஒன்றாக இருந்த நிலையில், அவரது புகைப்படத்தைக் காட்டி சிறுமியிடமும் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் குறித்து காவல்துறை இதுவரை எந்தத் தகவலையும் உறுதி செய்யவில்லை.
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே கடந்த 12ஆம் தேதி வட மாநில இளைஞரால் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இரண்டு வாரங்களாகக் குற்றவாளியின் அடையாளம் தெரியாமல் காவல்துறையினர் 30 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில், நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, சம்பவம் நடந்தபோது, அப்பகுதியிலிருந்த சிசிடிவியில், ஒருவர், பள்ளிச் சிறுமியை கடத்திச் செல்வது பதிவாகியிருந்தது. மேலும் ஒரு சிசிடிவியில் அவரது முகம் தெளிவாகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில்தான், குற்றவாளி, ரயிலில் அமர்ந்துகொண்டு செல்லும் ஒரு சிசிடிவி புகைப்படம் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், அந்த ரயில் சென்ற பகுதியில் காவல்துறையினர் குற்றவாளியை தேடி வந்த நிலையில், நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.