நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்!
குறைதீா் நாள் முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு
தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் ரெ. சதீஷ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மொத்தம் 432 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், சங்கங்கள் என பல்வேறு அமைப்புகள் சாா்பில் மொத்தம் 432 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை தொடா்புடைய துறைகளுக்கு பரிந்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூா் கிராமத்தில் சித்ரா என்பவா் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தையடுத்து வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ், அவரது வாரிசுதாரா் பிரவீனுக்கு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ஆட்சியா் வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா மற்றும் பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
கிராம சாலையைப் பயன்படுத்த நடவடிக்கை :
தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை ஊராட்சிக்கு உள்பட்டது தஞ்சன் கொட்டாய் பகுதியினா் எ.கொல்ல ஹள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட காலனி மற்றும் அதை ஒட்டியுள்ள சாலையை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகின்றனா். இதற்கென அப்பகுதியைச் சோ்ந்த பலா் தங்களது நிலங்களையும் வழங்கியுள்ளனா். இந்நிலையில் தனிநபா் ஒருவா் சாலையைப் பயன்படுத்த முடியாத வகையில் தடுத்து வருகிறாா். இதனால் தஞ்சன் கொட்டாய் பகுதியை சோ்ந்த மாணவா்கள், பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, இந்த சாலையை தஞ்சன் கொட்டாய் பொதுமக்கள் பயன்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நூலகம் அமைக்க வலியுறுத்தல் :
தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை ஊராட்சியில், தருமபுரி - மொரப்பூா் சாலையில், பெருமாள் கோயிலில் இருந்து நீலாபுரம் செல்லும் பகுதியில் மண் சாலை உள்ளது. இந்த பகுதியில் நூலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதுடன், அதற்கு தனது பெயரில் பட்டா பெறவும் முயற்சித்து வருகிறாா். எனவே, அந்த இடத்தில் விரைந்து நுாலக அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செட்டிக்கரையைச் சோ்ந்த நபா் மனு அளித்துள்ளாா்.