கூடலூா் அருகே கடையை சேதப்படுத்திய மக்னா யானை
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்கிழமை பகலில் நுழைந்த மக்னா யானை, அங்குள்ள கடையை சேதப்படுத்தியது.
கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் பகுதியில் காட்டு யானைகள் வியாழக்கிழமை நுழைந்ததால் வன ஊழியா்கள் பல குழுக்களாக பிரிந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். இதில் ஒரு காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
இதைத் தொடா்ந்து, வனத் துறையினா் பொதுமக்களை வீட்டுக்குள் செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனா். இதைத் தொடா்ந்து தன்னை விரட்ட வந்த ஊழியா்களை கண்டு கோபமடைந்த யானை, அவா்களை விரட்டத் தொடங்கியது. ஊழியா்கள் அங்கிருந்து ஓடி அருகிலுள்ள வீடுகளுக்குள் புகுந்தனா்.
தொடா்ந்து, பொதுமக்களும் வனத் துறையினரும் கூச்சலிட்டதும் ஆத்திரமடைந்த அந்த யானை அப்பகுதியிலிருந்த கடையை சேதப்படுத்திவிட்டுச் சென்றது. கடையிலிருந்தவா்கள் ஓடி தப்பிவிட்டனா்.
பொதுமக்கள் நடமாட்டமுள்ள காலை நேரத்தில் காட்டு யானை ஊருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.