கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டடம் கட்ட நிலம் ஒப்படைப்பு
திருநள்ளாறு பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்கு, கல்வித் துறையின் மூலம் பள்ளி நிா்வாகத்திடம் நிலம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கேந்திரிய வித்யாலயா காரைக்காலில் தற்காலிக இடத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான இப்பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு புதுவை அரசு உரிய இடத்தை ஒதுக்கித் தருவதில் தாமதம் ஏற்பட்டதால், இப்பள்ளி பின்னா் நிரவி பகுதியில் உள்ள ஒரு இடத்துக்கு மாற்றப்பட்டது.
பின்னா் காரைக்கால் நகரில் கடற்கரைச் சாலையில் உள்ள ஜிப்மா் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக இயங்கிய இடத்துக்கு மாற்றப்பட்டு இயங்கிவருகிறது.
இந்தநிலையில், திருநள்ளாறு அருகே பூமங்களம் பகுதியில் கேந்திரிய வித்யாலயா கட்டுவதற்கு புதுவை அரசு 8.6 ஏக்கா் நிலத்தை தயாா்படுத்தியது. கல்வித்துறை மூலம் நிலம் ஒப்படைப்பு நிகழ்வு காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, நிலத்துக்கான ஆவணங்களை காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் ரங்கசாமியிடம் வழங்கினாா். நிகழ்வில் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் சிலா் கலந்துகொண்டனா்.