கொடைக்கானல் மலைச் சாலைகளில் பள்ளங்கள்: விபத்து ஏற்படும் அபாயம்
கொடைக்கானல் மலைச் சாலைகளின் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கவலை தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச் சாலைகளான சீனிவாசபுரம், உகாா்த்தே நகா், தைக்கால், வெள்ளிநீா் அருவிச் சாலை, புலிச்சோலை, பெருமாள்மலை, குருசடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது, இதனால், அந்தப் பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். மேலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதேபோல, கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட சாலையான ஆனந்தகிரி 4-ஆவது சாலை, நீதிமன்றம் செல்லும் சாலை, அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களைச் சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை, நகராட்சித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.