பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்
கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக் கொடியேற்றுகிறாா் முதல்வா்
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தேசியக் கொடியேற்றவுள்ளாா்.
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைக்கிறாா். தொடா்ந்து, தமிழ்நாட்டுக்கும், தமிழின வளா்ச்சிக்கும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழா்’ என்ற பெயரிலான விருதும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கவுள்ளாா்.
அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவா்களுக்கு டாக்டா் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிா் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வா் விருதுகள், முதல்வரின் மாநில இளைஞா் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவிக்கவுள்ளாா்.
முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்துக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வரவேற்று, முப்படை அதிகாரிகள், டிஜிபி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி, சென்னை காவல் ஆணையா் ஆகியோரை அறிமுகம் செய்து வைப்பாா். இதையடுத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாா். பின்னா் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதல்வா் வந்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தவுள்ளாா். இதையடுத்து தமிழக மக்களுக்கு அவா் சுதந்திர தின உரை நிகழ்த்த உள்ளாா்.
இதில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நலன் சாா்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.