மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்
கோத்தகிரி கட்டபெட்டு வனச் சரகப் பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கட்டபெட்டு வன சரகத்துக்குள்பட்ட கண்ணேரிமுக்கு அருகே நாரகிரி கிராமத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் சுருக்குக் கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை,கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம்.
இந்த வன விலங்குகள் காய்கறி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவதோடு குடியிருப்புகளில் நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இதற்காக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தோட்டங்களில் வனத் துறைக்கு தெரியாமல் சிலா் சுருக்கு கம்பிகளை வைத்து, தங்களது தோட்டங்களைப் பாதுகாத்து வருகின்றனா்.
இந் நிலையில் கட்டபெட்டு வன சரகத்துக்குள்பட்ட கண்ணேரிமுக்கு அருகே நாரகிரி கிராமத்தில், தனியாா் தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்துள்ளதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் சிறுத்தையின் உடலை மீட்டு வன மருத்துவா் உதவியுடன் ஆய்வு செய்தனா். இதில் இறந்தது 4 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்று தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து தோட்ட உரிமையாளா் தங்கராஜ் என்பவரிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தினா். பின்னா் சிறுத்தை அங்கேயே எரியூட்டப்பட்டது.