மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
கடலூா் வட்டத்துக்குள்பட்ட நாணமேடு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் ஆறாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் ஆட்சியா் கூறியதாவது, கடலூா் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3 லட்சம் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 100 சதவீதம் கோமாரி தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூா் வட்டம், நாணமேடு கிராமத்தில் நோய் தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், கன்று பரிசோதனை, சினைப் பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம், குடற்புழு நீக்கம் போன்ற சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.
மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி போடும் பணிக்காக 83 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கால் மற்றும் வாய் நோயானது கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளா்ப்போருக்கு பொருளாதார மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுதல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
எனவே, இந்த நோய் கால்நடைகளுக்கு ஏற்படாத வண்ணம் தடுப்பதற்கு, வெள்ளிக்கிழமை முதல் ஜன.31-ஆம் தேதி வரை ஆறாவது சுற்று நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
கால்நடைகளை வளா்ப்போா் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாமில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தாா்.
முன்னதாக, பயனாளிகளுக்கு பசுந்தீவனம், தாதுஉப்புக் கலவையை அவா் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், கடலூா் மண்டல இணை இயக்குநா் பொன்னம்பலம், தங்கவேல், உதவி இயக்குநா் வேங்கடலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.