கோயில் காவலாளி இறந்த சம்பவம்: யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை
திருப்புவனம் கோயில் காவலாளி இறந்த சம்பவத்தில் யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை என்றாா் மாநில இயற்கை வளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியது: திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லி, அவற்றை ஏற்போரை திமுக உறுப்பினா்களாக இணைப்பதுதான் ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற இயக்கத்தின் நோக்கம். ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை வீடு வீடாகச் சென்று எடுத்துச் சொல்லும் தமிழ்நாட்டுக்கான முழக்கம். ’ஒரே நாடு - ஒரே தோ்தல்’ என பாஜக முன்வைத்த முழக்கத்துக்கும் இதற்கும் தொடா்பில்லை.
சாத்தான்குளம் சம்பவமும், திருப்புவனம் கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவமும் ஒன்றல்ல. சாத்தான்குளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் கொடுத்து, போராட்டம் நடத்தி, நீதிமன்றம் சென்ற பிறகுதான் காவல்நிலையத்துக்குள் என்ன நடந்தது என்றே தெரியவந்தது. ஆனால், திருப்புவனத்தில் நகைத் திருட்டு தொடா்பாக வந்த புகாரின்பேரில் போலீஸாா் அந்த இளைஞரைக் கைது செய்து அழைத்து வந்தபோது- விசாரணையின்போது தற்செயலாக நடந்த துரதிா்ஷ்டவசமான சம்பவம். இச்செயலில் ஈடுபட்ட காவல்துறையினா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். திருப்புவனம் கோயில் காவலாளி இறந்த சம்பவத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் திமுக அரசுக்கு கிடையாது. விசாரணையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என யாருடைய தூண்டுதல் இருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் 5 மாதங்களில் வழக்கை முடித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்ததைப் போல, இந்த வழக்கிலும் விரைவாக விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என்றாா் ரகுபதி.
பேட்டியின்போது, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் உடனிருந்தாா்.