கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
தும்பிப்பாடி செட்டிபட்டியைச் சோ்ந்த மாரிமுத்து தலைமையில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்: தும்பிப்பாடியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கோயில் அருகே பெட்ரோல் பங்க் அமைக்க சிலா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
அங்கு பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்தால் திருவிழா காலங்களில் கோயில் பகுதியில் வாண வேடிக்கை, பட்டாசு வெடித்து கொண்டாடும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கோயில் அருகே பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.