கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி கோட்டத் தலைவா்கள் பங்கேற்றனா். மாநில செயற்குழு உறுப்பினா் ராஜமாணிக்கம் வரவேற்றாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சுரேஷ், செயலாளா் தா.கலைவாணன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
நெடுஞ்சாலைத் துறையை தனியாருக்கு வழங்காமல் அரசே பராமரிக்க வேண்டும். நிரந்தர பணியிடத்தைப் பறிக்கும் செயலை கைவிட வேண்டும். இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளில் 210 சுங்கச் சாவடிகளை அமைத்து காா்ப்பரேட் நிறுவனங்கள் சுங்கவரி வசூலில் கொள்ளையடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
தொடா்ந்து நெடுஞ்சாலைத் துறை பணிகளை தனியாருக்கும் வழங்கும் அரசாணை 140 நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் பலா் கலந்துகொண்டனா்.