கௌதம் கம்பீர் என்னிடம் எப்போதும் கூறுவது என்ன தெரியுமா? மனம் திறந்த ஆகாஷ் தீப்!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் மனம் திறந்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இந்த தொடரை 2-2 என சமன் செய்து அசத்தியது.
இந்த தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆகாஷ் தீப் சிறப்பாக செயல்பட்டார். ஒரு போட்டியில் அவர் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதேபோல, ஓவல் டெஸ்ட்டில் அரைசதம் எடுத்து அசத்தினார் ஆகாஷ் தீப். இந்த இரண்டு போட்டிகளிலும் ஆகாஷ் தீப்பின் செயல்பாடுகள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமாக அமைந்தன.
ஆகாஷ் தீப் கூறியதென்ன?
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், உன்னுடைய திறமை என்னவென்று உனக்குத் தெரியவில்லை என கௌதம் கம்பீர் கூறியதாக ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கௌதம் கம்பீர் கிரிக்கெட்டின் மீது அதீத ஆர்வம் கொண்ட பயிற்சியாளர். அவர் எப்போதும் எங்களுக்கு ஊக்கமளிப்பார். நான் என்னை நம்புவதைக் காட்டிலும் அவர் என்னை மிகவும் அதிகமாக நம்புகிறார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் என்மீது அவர் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்.
ஓவல் டெஸ்ட்டில் அரைசதம் அடித்த பிறகு, உன்னால் முடியும் எனக் கூறிக் கொண்டிருந்ததற்கான காரணம் புரிகிறதா என என்னிடம் கேட்டார். உன்னுடைய திறமை என்னவென்று உனக்குத் தெரியவில்லை எனவும், தொடர்ந்து இந்திய அணிக்காக இதே அர்ப்பணிப்புடன் விளையாட வேண்டியிருக்கும் எனவும் அவர் கூறினார் என்றார்.
இதையும் படிக்க: ஐசிசி தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறிய திலக் வர்மா!