சரியும் சிவகாசி பட்டாசுகளின் விற்பனை
எஸ். பாலசுந்தரராஜ்
சிவகாசி: மத்திய அரசால் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்கள் மூலம் தயாரித்து விற்கப்படும் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் "கோல்டு பைரோ' என்ற வகை பட்டாசு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போட்டி நிகழ்ச்சியில் ஒருவர் வென்றால் அவரைப் பாராட்டுவதற்காக மேடையில் இந்த வகை ஒளி சிந்தும் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. மேலும் திருமண விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் மணமக்களை வரவேற்கும் போது கையில் வைத்துக் கொண்டு இந்தப் பட்டாசு வெடிக்கப்படுகிறது. தற்போது இந்த வகை பட்டாசுகள் சென்னை, தில்லி உள்ளிட்ட பெருநகரங்களில் அதிகம் புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, உள்ளரங்குகளில் வேடிக்கைக்காக பயன்படுத்தப்படும் இந்தப் பட்டாசுகள் "நைட்ரோ செல்லுலோஸ்' என்ற வகை வேதியியல் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இந்த பட்டாசிலிருந்து சீறிக் கிளம்பும் தீப்பொறிகள் குறைந்த அளவு வெப்பத்தையே வெளியிடுகின்றன. எனவே, இந்தப் பொறிகளின் மீது குறிப்பிட்ட உயரத்தில் கை வைத்தால்கூட அதன் வெப்பம் தாக்குவதில்லை. இந்த கோல்டு பைரோ பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டவையாகும். இந்த வகை பட்டாசுகளை தயாரிக்க சீனாவிலிருந்து சட்ட விரோதமாக மூலப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதேபோல, இந்திய சிறுவர்களிடையே அதிகம் விரும்பப்படும் தடை செய்யப்பட்ட "பாப் பாப்' பட்டாசுகளிலும் "சில்வர் ஃபெஸிமெண்ட்' என்ற வேதிப் பொருளை சிறு கல், துகள்களில் கலந்து உருண்டையாக்கி பளபளக்கும் காகிதத்தில் சுருட்டி தயாரிக்கின்றனர். இவற்றை தரையில் வீசி எறிந்தால் ஒலி எழுப்பும். இந்த வகை பட்டாசுகளை கிட்டங்கியில் சேமித்து வைத்தால் சிறிய தீப்பொறி ஏற்பட்டாலே வெடி விபத்து ஏற்பட்டு பெரும் சேதத்தை விளைவிக்கும்.
மேலும், தற்போது "மேச்சஸ் பாம்' என்ற வகை பட்டாசு தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டாசு தீக்குச்சி போல இருக்கும். தீப்பெட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து ஒரு குச்சியை உரசி தரையில் போட்டால் அதிக ஒலியை எழுப்பும். இந்த வகை பட்டாசுகளால் ஏற்படும் ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில்கூட வெடிக்கின்றனர் என்பது கவலையளிக்கக் கூடியதாகும்.
விருதுநகர் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் "அடியாள் வெடி' என்ற ஒரு வகை பட்டாசு தயாரிக்கப்படுகிறது. காகிதக் குழாயில் தடை செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைட் உள்ளிட்ட வேதியியல் பொருள்களைக் கொண்டு இந்த வகை பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இது வழக்கமாகப் பயன்படுத்தும் லட்சுமி வெடியைவிட மூன்று மடங்கு ஒலியுடன் வெடிக்கும் ஆற்றல் கொண்டது.
தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்களில் தயாராகும் பாப் பாப், கோல்டு பைரோ உள்ளிட்ட பட்டாசு ரகங்கள் தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தயாரிக்கப்பட்டு, இந்திய சந்தையில் விற்கப்படுவதால் சிவகாசியில் முறையாக தயாரிக்கப்படும் பல ரக பட்டாசுகள் விற்பனையில் சரிவைச் சந்தித்து வருகின்றன.
இதுகுறித்து சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்களால் தயாரிக்கப்படும் கோல்டு பைரோ, பாப் பாப் பட்டாசுகளால் சிவகாசியில் தயாரிக்கப்படும் ஜோர்சா, கேப், லட்சுமி போன்ற வெடிகள், வண்ண மத்தாப்பூ, ஒத்தை வெடி, பென்சில், பூச்சட்டி, சாட்டை, சங்கு சக்கரம் உள்ளிட்ட பல பட்டாசுகள் இந்திய சந்தையில் விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளன. மேலும், பட்டாசு என்றாலே சிவகாசிதான் என்ற நிலையும் மாறிவிட்டது.
தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம் பெற்று பல பட்டாசு ஆலைகள் தொடங்கப்பட்டன. இந்த ஆலைகளில் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி உள்ளிட்ட பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் சட்டவிரோத மூலப் பொருள்ளைக் கொண்டு பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
சீனாவிலிருந்து விளையாட்டுப் பொருள்கள் என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, தமிழகத்துக்கே உரித்தான பட்டாசு தயாரிப்புத் தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.