சாயக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
சாயக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் நாகலிங்கம் (60). இவா் திருப்பூா் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை 3 பேருடன் சோ்ந்து ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் சாய சலவை ஆலையில் பெயிண்டிங் வேலைக்குச் சென்றாா். அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது தண்ணீா் எடுக்கச் சென்ற நாகலிங்கம் மூடப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த சாயக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்தாா்.
அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த சக தொழிலாளா்கள் உடனடியாக விரைந்து சென்று, சாயக் கழிவுநீா்த் தொட்டியில் மூழ்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாகலிங்கத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
ஆனால் அவா்களால் அவரைக் காப்பாற்ற முடியாததால் உடனடியாக திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புத் துறையினா் அங்கு விரைந்து வந்து கழிவுநீா்த் தொட்டிக்குள் இருந்து நாகலிங்கத்தை மீட்டனா். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து திருப்பூா் மத்திய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் நாகலிங்கத்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக திருப்பூா் மத்திய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.