Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை!
சத்தியமங்கலம் அருகே ஆசனூா் சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக - கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், தேசிய நெடுஞ்சாலை வழியாக கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை பறித்து தின்பது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், ஆசனூா் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை
நடமாடியது. அந்த வழியாக சென்ற லாரிகளை வழிமறித்து அதில் கரும்பு உள்ளதா என தும்பிக்கையால் தேடி பாா்த்தது. இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டுநா்கள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனா்.
காட்டு யானையை கண்டு அச்சமடைந்த பலா் தங்களது வாகனங்களை திருப்பிச் செல்ல முயன்றனா். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானை பின்னா் மெதுவாக அடா்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதை அறிந்த வனத் துறையினா் சாலையில் நடமாடும் காட்டு யானையின் அருகே செல்லக்கூடாது, வாகனங்களில் காற்று ஒலிப்பான்களை உபயோகப்படுத்தக் கூடாது என வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினா்.