`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; ...
சாலை விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை தலைமைக் காவலா் உடலுக்கு காவல் துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
மதுரை மாடக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கணபதி (40). இவா் மதுரை மாநகா் காவல் துறைக்குள்பட்ட கூடல்புதூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா்.
இவா் மனைவி சங்கீதாவுடன் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்றாா். ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் இருவரும் மதுரைக்கு வந்து கொண்டிருந்தனா். நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி பகுதியில் வந்தபோது, இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் கணபதி உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கூறாய்வு முடிந்த நிலையில், தலைமைக் காவலா் கணபதி உடலுக்கு மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா், மாடக்குளம் பகுதியில் உள்ள மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அப்போது, காவல் துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. ஆயுதப்படை துணை ஆணையா் திருமலை குமாா், மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் பெத்துராஜ் உள்ளிட்ட ஏராளமான காவல் துறையினா் கலந்து கொண்டனா்.