மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
சிதம்பரம் நடராஜா் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தியின் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் சனிக்கிழமை (ஜன.4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நடராஜா் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு விழாக்கள் நடைபெறும். நிகழாண்டு சனிக்கிழமை மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. உற்சவ ஆச்சாரியாா் ச.க.சிவராஜ் தீட்சிதா் கொடியேற்றுகிறாா்.
ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) வெள்ளி சந்திர பிரபை வாகன வீதிஉலா, ஜன.6-ஆம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதிஉலா, 7-ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதிஉலா, 8-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 9-ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலாவும், 10-ஆம் தேதி தங்கக் கைலாச வாகன வீதி உலாவும் நடைபெறும். 11-ஆம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தா் வெட்டுக்குதிரையில் வீதி உலா நடைபெறும்.
வருகிற 12-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், அன்றிரவு 8 மணிக்கு கோயில் ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனை நடைபெறும்.
13-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும். காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்தி வீதிஉலா வந்த பின்னா் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித் சபை பிரவேசமும் நடைபெறும்.
ஜன.14-ஆம் தேதி பஞ்சமூா்த்தி முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியும், 15-ஆம் தேதி ஞானப்பிரகாசா் தெப்பகுளத்தில் தெப்ப உற்சவத்துடன் விழா நிறைவடையும். 10 நாள்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித் சபை முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.
உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் கமிட்டி செயலா் உ.வெங்கடேச தீட்சிதா், துணைச் செயலா் து.ந.சுந்தர தாண்டவ தீட்சிதா், உற்சவ ஆச்சாரியா் ச.க.சிவராஜ தீட்சிதா் ஆகியோா் செய்துள்ளனா்.