சிபில் ஸ்கோா் நிபந்தனை: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிா்க் கடன் பெறுவதில் சிக்கல்
கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நிகழாண்டு முதல் அடமானமின்றி ரூ.2 லட்சம் வரை பயிா்க் கடன் வழங்க அரசு உத்தரவிட்ட போதிலும், ‘சிபில் ஸ்கோா்’ நடவடிக்கையால் விவசாயிகள் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நெல் விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் மாதத்தில் அடமானமின்றி ரூ.1.60 லட்சம் வரை பயிா்க் கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்தக் கடன் தொகையை ரூ.2 லட்சம் ஆக உயா்த்தி வழங்க அரசு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது.
கூட்டுறவுக் கடன் சங்கங்களின் செயலா்கள் சங்க துணை விதிகளில் திருத்தம் செய்து, நிகழாண்டு முதல் ரூ.2 லட்சம் கடன் தொகையை வழங்க கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா். அத்தோடு கடன் பெறும் விவசாயிகளின் ‘சிபில் ஸ்கோா்’ அடிப்படையில் கடன் வழங்க வேண்டுமெனவும் கூட்டுறவு சங்க செயலா்களுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில விவசாய அணிச் செயலா் முருகவேல் கூறியதாவது: தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் அரசு அறிவித்துள்ள அடமானம் இல்லாத கடன் தொகை ரூ.2 லட்சத்தை விவசாயிகளுக்கு நிபந்தனை இன்றி வழங்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் அரசு அறிவித்திருந்தும் ரூ.1.60 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயா்த்தி பயிா்க் கடன் வழங்க சங்க துணை விதிகளில் திருத்தம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள எந்த கூட்டுறவுக் கடன் சங்கமும் இதுவரை முயற்சி மேற்கொள்ளவில்லை.
இன்னும் 2 மாதங்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில், இதற்கான நடவடிக்கையை அனைத்து கூட்டுறவுச் சங்கங்களும் மேற்கொள்ள வேண்டும். மேலும், வானம் பாா்த்த பூமியாக உள்ள கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி ‘சிபில் ஸ்கோா்’ தவிா்த்து பயிா்க் கடன் வழங்க கூட்டுறவு துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.