சிப்காட் பணிகளை நிறுத்தக் கோரி கிராம மக்கள் மனு
மதுரை மாவட்டம், கல்லாங்காடு பகுதியில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், வஞ்சிநகரம், பூதமங்கலம், கொடுக்கம்பட்டி ஊராட்சிகளில் உள்ள கல்லாங்காடு பகுதியில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்க தமிழக அரசின் தொழில் துறை ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அந்தப் பகுதி கிராம மக்கள் தொடக்க முதலே எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் விவசாய நீா் நிலைகள், மேய்ச்சல் நிலங்கள், வழிபாட்டுத் தலங்கள் பாதிக்கப்படும், தொல்லியல் எச்சங்கள் அழியும் என்பதால், சிப்காட் அமைக்கும் முயற்சிகளை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, 18 கிராம மக்கள் கூட்டமைப்பு சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பிறகு, இதே கோரிக்கையை வலியுறுத்தி, 3 கிராம ஊராட்சிகளின் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், தொழில் பேட்டை அமைக்கும் பணிக்கான முன்னெடுப்புகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. இதற்காக 279 ஏக்கா் புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது சுமாா் 1,000 ஏக்கா் நிலம் வரை கையகப்படுத்த முயற்சிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி, கல்லாங்காடு அருகே உள்ள நாகப்பன் சிவல்பட்டி, மூவன் சிவல்பட்டி கண்டுகப்பட்டி, தாயம்பட்டி, முத்தம்பட்டி, பெரிய சிவல்பட்டி, நல்ல சுக்காம்பட்டி, முரவக்கிழவன்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிா்வாகி நேதாஜி, மகளிா் ஆயம் நிா்வாகி அருணா, மக்கள் பாதை இயக்க நிா்வாகி அமுதா, டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பு நிா்வாகி ஞானசேகரன், மக்கள் புரட்சிகர மாா்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி பொறுப்பாளா் நிவேதா, பெண்கள் எழுச்சி இயக்கப் பொறுப்பாளா் மகாலட்சுமி, அரிட்டாப்படாடி ஏழு மலைகள் பாதுகாப்பு இயக்க நிா்வாகி விமலா, மக்கள் அதிகார கழகப் பொறுப்பாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனா்.
கும்மி அடித்த பெண்கள்...
முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் மாவட்ட ஆட்சியரகம் முன் முழக்கமிட்டனா். கோரிக்கை குறித்து கவனம் ஈா்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் பெண்கள் கும்மி அடித்தனா்.