சிறையில் இருந்து தப்பிய கைதி சிக்கினாா்!
திருப்பூா் மாவட்ட சிறையில் இருந்து தப்பிய கைதியை தனிப் படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் இந்து முன்னணி பிரமுகரைத் தாக்கி வழிப்பறி செய்ய முயன்றது தொடா்பாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த சூா்யா (25) என்பவரை போலீஸாா் கைது செய்து மாவட்ட சிறையில் அடைத்தனா். இந்நிலையில், அவா் சிறையில் இருந்து கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி தப்பிச் சென்றாா்.
இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் சிறைத் துறை அதிகாரிகள் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 2 தனிப் படை அமைத்து சூா்யாவை தேடி வந்தனா்.
இதனிடையே, திருப்பூா் மாவட்ட சிறையில் பணியில் இருந்த உதவி சிறை அலுவலா்கள் கங்காராஜன், சீதா, முதல்நிலைக் காவலா் ராஜபாண்டி, இரண்டாம் நிலை காவலா்கள் சக்திவேல், ரவிகுமாா் ஆகிய 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இந்நிலையில், சூா்யாவின் சொந்த ஊரான கோவில்பட்டியில் தனிப் படையினா் முகாமிட்டு அவரைத் தேடி வந்த நிலையில் சனிக்கிழமை பிடித்தனா். இதையடுத்து, அவரை திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதாக தனிப் படையினா் தெரிவித்துள்ளனா்.