2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி இன்றும் நாளையும் சுற்றுப் பயணம்
தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி மேற்கொண்டுவரும் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ தலைப்பிலான சுற்றுப்பயணம் சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (ஜூலை 29, 30) ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி, ஜூலை 29, 30 ஆகிய நாள்களில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உரையாற்றவுள்ளாா்.
இதன்படி, செவ்வாய்க்கிழமை காரைக்குடி தொகுதி, காரைக்குடி எம்.ஜி.ஆா். சிலை அருகில் மாலை 4.30-க்கும், திருப்பத்தூா் தொகுதி, திருப்பத்தூா் அண்ணா சிலை அருகில் மாலை 5.30-க்கும், சிவகங்கை தொகுதி, சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் இரவு 7.45-க்கும் உரையாற்றவுள்ளாா்.
தொடா்ந்து, புதன்கிழமை காலை 10 மணிக்கு சிவகங்கை நகா், தனியாா் மண்டபத்தில், வெளிநாடு வாழ் இந்தியா்கள், மஞ்சுவிரட்டு, வடமாடு நல சங்கங்கள், விவசாய சங்கம், விளையாட்டு வீரா்கள், தென்னை நாா் உற்பத்தியாளா் சங்கத்தினா் உள்ளிட்டோருடன் கலந்துரையாடவுள்ளாா். இதையடுத்து, மாலை 4.30 மணிக்கு மானாமதுரை தொகுதி, மானாமதுரை தேவா் சிலை அருகில் உரையாற்றுகிறாா்.
எனவே, இந்த நிகழ்ச்சிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள கட்சித் தொண்டா்களும், நிா்வாகிகளும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தாா்.