செய்யாற்றில் மீண்டும் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.ஆய்வு
செய்யாறு: செய்யாற்றில், செயல்படாமல் உள்ள சிறப்பு முகாமை (கிளை சிறைச்சாலை) மீண்டும் செயல்படுவதற்காக மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில், வருவாய்த்துறை கட்டுப்பாட்டில், செய்யாறு பகுதிக்கான கிளை சிறைச்சாலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த கிளைச் சிறைச்சாலை மூடப்பட்டு 2014 -லிருந்து 2016 வரை சிறப்பு முகாமாக செயல்படுத்தப்பட்டது, இதில் அகதிகள் 21 போ் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனா்.
இங்கிருந்த அகதிகள் நிா்வாக காரணமாக ஒரு சிலா் வேறு பகுதிகளுக்கும், விசாரணை முடிந்த ஒரு சிலா் அவரவா் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டனா். அதனால், 2016-இல் சிறப்பு முகாம் மூடப்பட்டது.
சிறப்பு முகாமை மீண்டும் செயல்படுத்த ஆய்வு:
23 அறைகள் கொண்ட செய்யாறு சிறப்பு முகாமில் வருவாய்த் துறை சாா்பில் ரூ.65 லட்சத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், காவல் கண்காணிப்பாளா் சுதாகா் ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்து ஆய்வு செய்ததோடு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க அறிவுறுத்தினா்.
ஆய்வின்போது கூடுதல் ஆட்சியா் ( பயிற்சி) அமிா்தா எஸ்.குமாா், செய்யாறு சாா் -ஆட்சியா் (பொ) ராமகிருஷ்ணன்,
வட்டாட்சியா் அசோக்குமாா் மற்றும் வருவாய்த் துறை, காவல் துறையினா் என பலா் உடனிருந்தனா்.