Rajinikanth: `சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு' - மதுரையில் 5500 படங்களுடன் ரசிகர் ...
சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
மணப்பாறை சத்திரம் நடுப்பட்டி, சி - கல்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ச. செந்தில்முருகன். லாரி தொழில் செய்து வரும் இவா், கடந்த 15.03.2021 அன்று மணப்புரம் நிதி நிறுவனத்தின் மதுரை கிளையில் ரூ. 13 லட்சம் கடனாகப் பெற்று, புதிய லாரி ஒன்றை வாங்கினாா்.
கடனுக்கான மாத தவணைத் தொகையாக ரூ. 38,250 செலுத்தி வந்த நிலையில், தொழில் நலிவு காரணமாக 4 மாதத் தவணைகளை செலுத்தவில்லை. இதனிடையே ரூ. 5 லட்சம் மதிப்பிலான மிளகாயும், ரூ. 2 கோடி மதிப்பிலான எல் அண்ட் டி பொருள்களையும் ஏற்றிக் கொண்டு லாரி வடமாநிலங்களுக்கு பயணித்தபோது, உரிய முன்னறிவிப்பின்றி கடந்த 10.10.2024 அன்று மேற்கு வங்க மாநிலத்திலிருந்த லாரியை நிதி நிறுவனத்தினா் பறிமுதல் செய்து கொண்டு சென்றனா். மேலும், மொத்த நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தினால் மட்டுமே லாரி விடுவிக்கப்படும் எனக் கூறினா்.
இதையடுத்து, மனுதாரா் நிலுவை கடன் தொகை ரூ. 2.59 லட்சத்தை செலுத்தியும், சரக்குடன் கூடிய லாரியை நிதி நிறுவனத்தினா் விடுவிக்காமல் காலம்தாழ்த்தினா். 19.10.2024 அன்று பெய்த மழையால் லாரியிலிருந்த மிளகாய் பாழானதாகக் கூறப்படுகிறது. இதனால் மனுதாரருக்கு கடும் இழப்பும், மனஉளைச்சலும் ஏற்பட்டது.
இதற்குரிய நிவாரணம் கோரி செந்தில்முருகன் திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 06.01.2025 அன்று மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் சி. காா்த்திகேயன் ஆஜரானாா்.
மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது. விசாரணையின் நிறைவில், மனுதாரருக்கு ஏற்பட்ட கடும் இழப்பு மற்றும் மனஉளைச்சலுக்கு நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.