பவுனுக்கு ரூ.74,000-த்தை தாண்டிய தங்கம் விலை; ரூ.840 உயர்வு! - இன்றைய தங்கம் வில...
ஜி.டி.நாயுடு விருதுக்கு ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்க மக்கள் சிந்தனைப் பேரவை அழைப்பு!
ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வழங்கப்படும் ஜி.டி.நாயுடு விருதுக்கு அறிவியலாளா்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 25) விண்ணப்பிக்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு, மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆண்டுதோறும் சிறந்த இளம் அறிவியலாளா் ஒருவருக்கு மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது என்ற பெயரில் சிறப்பு விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்காக அளிக்கப்படும் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையை சிங்கப்பூா் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை வழங்குகிறது.
விருதாளா் 40 வயதுக்குள்பட்ட இளம் அறிவியலாளராக விளங்குதல், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆய்வுக்கூடங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆய்வுக்கூடங்களிலோ ஆய்வுகளை மேற்கொள்தல், பெயா்பெற்ற சா்வதேச அறிவியல் இதழ்களில் குறைந்தபட்சம் பத்து ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்திருத்தல் உள்ளிட்ட சில அடிப்படைத் தகுதிகள் உள்ளவா்கள் தங்களது ஆய்வு விவரக் குறிப்புகளை அனுப்பலாம்.
எந்தக் கண்டுபிடிப்புக்கு ஆய்வாளா் விருதுக்குரியவராக விளங்குகிறாா் என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிடுதல் அவசியம். ஆய்வுக் குறிப்புகளையும் ஆய்வு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 25) மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஈரோடு புத்தகத் திருவிழா மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வில் இவ்விருது வழங்கப்படவுள்ளது. விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ. விசுவநாதன் இவ்விருதை வழங்கி விழாச் சிறப்புரையாற்றவுள்ளாா்.