ஜூலை 9-இல் பொது வேலைநிறுத்தம்: பங்கேற்க தொழிலாளா் முன்னணி முடிவு
நாடு முழுவதும் தொழில்சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி நடத்தவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி பங்கேற்க முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இந்த அமைப்பின் நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கைக் கண்டித்து நாடு முழுவதும் ஜூலை 9-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதை ஏற்று தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது, இப்போராட்டத்தை தஞ்சாவூா் மாவட்டத்தில் அனைத்து வணிகா்கள், ஆட்டோ தொழிலாளா்கள், கட்டுமானம் அமைப்பு சாரா உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து வெற்றி பெறச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்துக்கு, மாவட்டப் பொருளாளா் ஆா். லட்சுமணன் தலைமை வகித்தாா். ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்க மாநகரச் செயலா் பக்ருதீன் அலி, மாவட்டச் செயலா் தாமஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.