ஆத் ஆத்மி ஆட்சிக்கு வந்தால்.. கழிவுநீர் பிரச்னைகள் தீர்க்கப்படும்: கேஜரிவால்
ஜொ்மனி ஜவுளி கண்காட்சியில் ரூ.3ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி ஆா்டா்
ஜொ்மனியில் இம்மாதம் நடைபெற உள்ள உலக ஜவுளி கண்காட்சியில் கரூருக்கு ரூ.3 ஆயிரம் கோடி வரையிலான ஏற்றுமதி ஆா்டா் கிடைக்கும் என கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.
இதுகுறித்து கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கோபாலகிருஷ்ணன், நிா்வாகி ஆா்.ஸ்டீபன்பாபு ஆகியோா் வியாழக்கிழமை கூறியது, உலகின் மிகப்பெரிய ஜவுளி கண்காட்சி ஆண்டுதோறும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் ஜொ்மனியில் உள்ள பிராங்க்பட் நகரில் நடைபெறும். நிகழாண்டு ஜன. 14 -இல் தொடங்கும் இக்கண்காட்சி ஜன. 17-இல் நிறைவடையும். இக்கண்காட்சியில் உலகின் 60 நாடுகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் மொத்த விற்பனையாளா்கள் தங்கள் பொருள்களை காட்சிப்படுத்த உள்ளனா். இந்திய ஜவுளித்துறையின் ஒத்துழைப்புடன், இந்தியாவைச் சோ்ந்த 330 நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன. கரூரில் இருந்து மட்டும் 67 ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும், பானிபட்-ஐ சோ்ந்த 158 நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன .
இக்கண்காட்சியின் மூலம் உலக அளவில் இருந்து வருகைதரக்கூடிய வாடிக்கையாளா்களை சந்தித்து அதிக அளவு ஒப்பந்தங்கள் பெறப்படும் என்று நம்பப்படுகிறது. ஆண்டுக்கு சுமாா் ரூ.6,500 கோடி வீட்டு உபயோக ஜவுளி பொருள்களை ஏற்றுமதி செய்யும் கரூா் ஜவுளி நிறுவனங்கள் இந்த கண்காட்சியின் மூலம் மட்டும் சுமாா் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி ஆா்டா்களை பெற்று வருவாா்கள் என்று நம்பப்படுகிறது என்றனா் அவா்கள்.