டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்: விக்ரமராஜா
சேலம் : டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா சிறப்புரை ஆற்றினாா்.
பின்னர்,விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறுகையில்,
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மே 5 ஆம் தேதி வணிகர் சங்க பேரமைப்பின் 42 ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு வணிகா் அதிகார பிரகடன மாநாடாக நடைபெறும்.
இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்
இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக சிறு வணிக விபாரிகளையும், மளிகை கடை உரிமையாளர்களையும் பாதிக்கும் டி-மார்ட் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அனுமதி இல்லாமல் அத்துமீறி தங்களது நிறுவனங்களை நிறுவி வருகிறது. இதனால் 20 சதவிகித வியாபாரிகள் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை எனில் வணிகர் சங்கங்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த போராட்டம் அகில இந்திய அளவில் நடத்தப்படும். வணிகா்கள் நலனை காக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். ஜிஎஸ்டி உள்பட வணிகா்களின் பிரச்னைகளின் உரிய தீா்வு காணப்படாவிட்டால், போரட்டத்தை முன்னெடுக்க வணிகா் சங்க பேரமைப்பு தயங்காது என்று விக்ரமராஜா கூறினார்.