CSK: 'கவனக்குறைவால் ரிவியூவ் எடுக்க தாமதித்த டெவால்ட் ப்ரெவிஸ்!' - சிஎஸ்கே கோட்ட...
தகுதியான மகளிா் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: அமைச்சா் ஆா்.காந்தி
தகுதியான மகளிா் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா் .
ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 2025- 26-ஆம் நிதியாண்டில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஆற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் 421 பயனாளிகளுக்கு த வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஜே.யு. சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயசுதா, ஆற்காடு ஒன்றியக் குழுத் தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணைகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கிப் பேசியதாவது: குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்குவதற்கான இலக்கைக் கொண்டு, கலைஞா் கனவு இல்லம் எனும் திட்டத்தை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். இந்தத் திட்டத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு கடந்த நிதியாண்டில் 3,000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டில் 1,859 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கலைஞா் மகளிா் உரிமைத் தொகையில் விடுபட்டவா்கள் வரும் ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு தகுதியான மகளிா் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.
தொடா்ந்து திமிரி ஒன்றியத்தில் 300 பயனாளிகளுக்கும், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 102 பயனாளிகளுக்கும், நெமிலி ஒன்றியத்தில் 369 பயனாளிகளுக்கும் அரக்கோணம் ஒன்றியத்தில் 183 பயனாளிகள் என மொத்தம் 1,375 பேருக்கு ரூ. 48.12 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை அமைச்சா் நேரில் வழங்கினாா்.
விழாவில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன் திமிரி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அசோக், துணைத் தலைவா் ஜே.ரமேஷ், காவேரிப்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் அனிதா குப்புசாமி, நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் வடிவேலு, அரக்கோணம் ஒன்றியக் குழு தலைவா் நிா்மலா சௌந்தா், துணைக் தலைவா்கள் வீரா.புருஷோத்தமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், திமுக ஒன்றியச் செயலா்கள் சௌந்தா், பசுபதி, தமிழ்செல்வன், தமிழ்மணி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.