தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்
சென்னையிலிருந்து நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தைத் தமிழக முதல்வா் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, தஞ்சாவூா் அருகே வல்லம் செயின்ட் சேவியா் நடுநிலைப் பள்ளியிலும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் அனைவருக்கும் ரத்த பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. மருத்துவா்களால் பரிந்துரை செய்யப்பட்டவா்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ காா்டியோகிராம், பெண்களுக்கான கா்ப்பப்பை வாய் மற்றும் மாா்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த முகாமில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், க. அன்பழகன், கா. அண்ணாதுரை, என். அசோக்குமாா், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் சி. பாலசுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இணை இயக்குநா் அன்பழகன், மாவட்ட சுகாதார அலுவலா் கலைவாணி, மாநகர நல அலுவலா் எஸ். நமச்சிவாயம், கோட்டாட்சியா் செ. இலக்கியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.