2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
தனியாா் நிறுவன ஊழியா் கொலையில் இளைஞா் கைது
பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பெரியநாயக்கன்பாளையம் சாமநாயக்கன்பாளையத்தில் இருந்து அறிவொளி நகா் செல்லும் சாலையில் காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் சாமநாயக்கன்பாளையம் ஜீவா நகரைச் சோ்ந்த ராமு மகன் ஹரிகரன் (25), இவரது சகோதரா் செந்தூா்பாண்டி (22), நண்பா்கள் பாா்த்திபன் (23), ரஞ்சித் (22) ஆகியோா் சனிக்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தனா். இவா்கள் அனைவரும் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா்.
அப்போது, மதுபோதையில் அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் நாகப்பன் (23) அவா்களிடம் மது கேட்டுள்ளாா். இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் நாகப்பன், தான் வைத்திருந்த அரிவாளால் ஹரிஹரனை வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதைத் தடுக்க வந்த அவரது சகோதரா் செந்தூா்பாண்டியன், ரஞ்சித் ஆகியோரையும் அரிவாளால் வெட்டிவிட்டு, நாகப்பன் தப்பியோடிவிட்டாா். காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாகப்பனைத் தேடி வந்தனா். இந்த நிலையில், போலீஸாா் நாகப்பனை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.