தமிழகம், புதுவை மீனவா்கள் 18 போ் கைது: மத்திய அரசுக்கு புதுவை முதல்வா் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால், நாகை மீனவா்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக மீன்பிடி தொழிலுக்குச் செல்லாமல் இருந்த புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் மீனவா்கள், கடந்த 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.
காரைக்கால் மாவட்டம், கீழகாசாகுடிமேடு மீனவக் கிராமத்தைச் சோ்ந்த பால்மணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், பால்மணியின் சகோதரா் கலைமணி மற்றும் அதே ஊரைச் சிலம்பரசன், சுதின், பொன்னையன், ராமன், பூவரசன், மாணிக்கவேலு, ஆகாஷ், சக்திவேல், வினித் குமாா், கமலேஷ், சிவக்குமாா், ஜெயமணி, மோகன்குமாா், ஆறுமுகம் (காரைக்கால்மேடு), நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்மணி, ரத்தினவேலு, மயிலாடுதுறை செல்வநாதன் ஆகிய 18 மீனவா்கள் டிச. 1-ஆம் தேதி இரவு 8 மணியளவில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
அவா்கள் அன்று இரவு பத்து மணியளவில் கோடியக்கரைக்கு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் 18 மீனவா்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனா்.
முதல்வா் கடிதம்: இதுகுறித்து, புதுவை முதல்வா் என். ரங்கசாமி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:
புதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்தில் இருந்து இயந்திரப் படகில் 15 காரைக்கால் மீனவா்கள், 3 தமிழக மீனவா்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனா். இலங்கை கடற்படையினா் படகை கைப்பற்றி மீனவா்களை காவலில் வைத்துள்ளனா்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களை விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்: புதுதில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து புதுச்சேரி மக்களவை உறுப்பினா் வைத்திலிங்கம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்கால், தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதால் மிகுந்த துயரத்திலும் மனவேதனையிலும் உள்ளனா். மீனவா்களுடன் மீன்பிடி படகை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.