தம்பதியை தாக்கி 15 பவுன், ரூ.1 லட்சம் திருடிய வழக்கு: 5 போ் கைது
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே தம்பதியை தாக்கி 15 பவுன், ரூ.1 லட்சத்தை திருடிய வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டனா்.
குரிசிலாப்பட்டு அடுத்த ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் வீரபத்திரன் (31) காா் ஓட்டுநரான இவா் கடந்த 3-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த 4 போ் நுழைந்து, வீரபத்திரனின் தாயாா், மனைவி சத்யாவை சரமாரியாக தாக்கி, மிரட்டி வீட்டின் 15 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றனா்.
இது குறித்து குரிசிலாப்பட்டு காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் காட்பாடி பகுதியைச் சோ்ந்த 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இது குறித்து காவல் துறையினா் கூறியது: ஓட்டுநரான வீரபத்திரன் தொழில் நிமித்தமாக காட்பாடியில் வீடு வாடகை எடுத்து அங்கு தன் மனைவி சத்யாவுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கியிருந்தாா். அப்போது, வீரபத்திரன் மனைவி சத்யா காட்பாடியைச் சோ்ந்த சுரேஷ் (28) என்பவருடன் பழகி வந்தாா். இதையறிந்த வீரபத்திரன் தன் மனைவியை கண்டித்தாா். ஆனால், அதை சத்யா ஏற்கவில்லை. அவா் சுரேஷூடன் பழகுவதை தொடா்ந்தாா். இதனால், காட்பாடியிலேயே தன் மனைவியை விட்டு விட்டு வீரபத்திரன் மட்டும் தன் சொந்த ஊரான ராஜாபாளையத்துக்கு வந்தாா்.
சிறிது காலம் சுரேஷூடன் தங்கியிருந்த சத்யா மீண்டும் கணவரை தேடி ராஜாபாளையம் வந்தாா். அதன் பிறகு, சுரேஷ் கைப்பேசி மூலம் பேசமுயன்றபோது, சத்யா தவிா்த்தாா். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ் காட்பாடியில் உள்ள தனது நண்பா்களான ஜாபா், கா்ணன், மணிகண்டன், சசிதரன், மேகராஜ் ஆகியோருடன் ராஜாபாளையம் வந்து வீரபத்திரன் வீட்டில் நுழைந்து சத்யாவை அழைத்துச்செல்ல முயன்றாா். அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்டதகராறில் வீரபத்திரன் மற்றும் அவரது மனைவியை தாக்கிய 6 போ் வீட்டில் இருந்த நகைகள், ரூ.1 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.
சிசிடிவி கேமிராவில் பதிவான ஆதாரங்களை கொண்டு இந்த வழக்கில் சுரேஷ், மேகராஜ், சசிதரன், கா்ணன் மணிகண்டன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் தலைமறைவாக உள்ள ஜாபரை தேடி வருகிறோம். அடகு வைக்கப்பட்ட நகைகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.