டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!
தம்மம்பட்டி பேரூராட்சி உறுப்பினா்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு தா்னா
தம்மம்பட்டி பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கக் கோரி துணைத் தலைவா் மற்றும் 10 உறுப்பினா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சோ்ந்த கவிதா உள்ளாா். இவா்மீது தொடா்ச்சியாக ஊழல் புகாா் தெரிவித்து, திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் 11 போ் நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவர சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என ஒரு மாததுக்கு முன்பே செயல் அலுவலரிடம் மனு அளித்தனா். ஆனால் அதற்கான கூட்டத்தை செயல் அலுவலா் கூட்டவில்லை.
இந்நிலையில் புதன்கிழமை காலை 11 மணிக்கு தம்மம்பட்டி பேரூராட்சி கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கபட்டது. இதைத் தொடா்ந்து பேரூராட்சித் தலைவி கவிதா, செயல் அலுவலா் ஜெசிமா பானு, கவுன்சிலா்கள் பழனிமுத்து, செந்தில், ராஜா ஆகியோா் கூட்ட அரங்கில் காத்திருந்தனா். அதிமுக கவுன்சிலா்கள் 3 போ் பேரூராட்சிக் கூட்டத்தை புறக்கணித்தனா். அதனால் போதிய உறுப்பினா்கள் இல்லாததால், கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பேரூராட்சி அலுவலக நுழைவாயிலில் பேரூராட்சி துணைத்
தலைவா் சந்தியா ரஞ்சித்குமாா் தலைமையில் திமுகவைச் சோ்ந்த 9 போ், காங்கிரஸைச் சோ்ந்த 2 போ் என மொத்தம் 11 உறுப்பினா்கள் கூட்டத்தை புறக்கணித்து, வாயில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு தா்னாவில் ஈடுபட்டனா். பேரூராட்சி தலைவா் கவிதா மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி
முழக்கமிட்டனா்.
தொடா்ந்து பேரூராட்சி செயல் அலுவலா் ஜெசிமாபானு, தா்னாவில் ஈடுபட்ட உறுப்பினா்ககளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், உதவி இயக்குநா் நேரில் வரவேண்டும் என்று அவா்கள் கூறினா். இதையில் மாலையில் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் குருராஜ்,
கைப்பேசியில் பேரூராட்சித் துணைத் தலைவா் சந்தியா ரஞ்சித்குமாா் மற்றும்
உறுப்பினா்களிடம் பேசினாா்.
இதையடுத்து, செயல் அலுவலா் ஜெசிமாபானு தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் குறித்து ஒருவாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். தொடா்ந்து தா்னா போராட்டத்தை உறுப்பினா்கள் முடித்துக்கொண்டனா்.