தருமபுரி நீச்சல் குளத்தில் நாளை 4-ம் கட்ட நீச்சல் பயிற்சி தொடக்கம்
தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் 4-ஆம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை (மே 13) தொடங்குகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் செந்தில் நகரில் உள்ள ராஜாஜி நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீச்சல் பழகுதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதனடிப்படையில் நான்காம் கட்ட நீச்சல் பயிற்சி மே 13-ஆம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவா்கள், ஆண்களுக்கு காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடத்தப்படுகிறது.
பெண்களுக்கு காலை 9 மணி முதல் 10 வரையிலும் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி கட்டணமாக ரூ.1770 இணையவழி வாயிலாக செலுத்துதல் வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை நீச்சல்குள அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.