ரூ. 25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறும்: அம...
தலைநகரில் பரவலாக தூறல் மழை
தலைநகா் தில்லியில் புதன்கிழமை மாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக தூறல் மழை பெய்தது. இதற்கிடையே, தில்லியில் காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.
தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. முக்கிய இடங்களில் மழை தேங்கி பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து, வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, நகரத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை மாலையில் பரவலாக தூறல் மழை பெய்தது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 0.3 டிகிரி குறைந்து 24.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 2.8 டிகிரி குறைந்து 36 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 69 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 47 சதவீதமாகவும் இருந்தது.
இதற்கிடையில், தில்லியில் கடந்த இரண்டு தினங்களாக மோசம் பிரிவில் இருந்து வந்த காற்றின் தரத்தில் புதன்கிழமை முன்னேற்றம் ஏற்பட்டு பெரும்பாலான இடங்களில் ’மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (மே 8) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.