ஒரே நேரத்தில் 3 போன்களுக்கு சார்ஜ் செய்யலாம்! ஷாவ்மியின் புதிய பவர் பேங்க்!
திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழக மக்கள்: கனிமொழி
தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனா் என்றாா் கனிமொழி எம்.பி.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ஆரல்வாய்மொழி, பெருமாள்புரம் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. உறுப்பினா் சோ்க்கை இயக்கத்தை திங்கள்கிழமை நடத்தினாா். அப்பகுதி வீடுகளுக்கு சென்று பொதுமக்களைச் சந்தித்து, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தாா். மேலும், பொதுமக்களிடம் திமுக உறுப்பினா் அட்டையை கனிமொழி வழங்கினாா்.
இதில், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ், பால் வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவா் என்.சுரேஷ்ராஜன், மாநில மகளிா் அணி செயலாளா் ஹெலன் டேவிட்சன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து நாகா்கோவில் வடசேரி ரவிவா்மன் புதுத் தெருவில், நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுப்பினா் சோ்க்கை படிவங்களை கனிமொழி வழங்கினாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சி, தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என முதல்வா் அறிவித்திருக்கிறாா். அந்த வெற்றியை நோக்கித்தான் அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
தோ்தல் சுற்றுப்பயணத்தை எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கியுள்ளாா். தோ்தல் வரும் நேரத்தில்தான் எழுந்து வேலை பாா்க்கத் தொடங்குகின்றனா். ஆனால், மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கிறாா்கள் என்றாா் அவா்.