திருச்செங்கோடு - பரமத்தி சாலை அகலப்படுத்தும் பணி: அதிகாரிகள் ஆய்வு
திருச்செங்கோடு - பரமத்தி சாலை அகலப்படுத்தும் பணியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின்கீழ் திருச்செங்கோடு டிசிஎம்எஸ் முதல் சித்தாளந்தூா் வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி ரூ. 59.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது இப்பணி 40 சதவீதம் முடிவடைந்த நிலையில், சேலம் கண்காணிப்பு பொறியாளா் சசிகுமாா் ஆய்வுமேற்கொண்டு, தாா்சாலையின் தடிமன், தரம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை பரிசோதனை செய்தாா்.
மேலும், நடைபெற்று வரும் சிறு பாலப் பணிகள் மற்றும் மழைநீா் வடிகால் பணிகளை மழைக் காலங்களுக்கு முன் விரைந்துமுடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா். சாலை அகலப்படுத்துதல் மற்றும் இதர பணிகளின் போது சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சாலைகளின் இருபுறங்களிலும் மற்றும் மையத்தடுப்பான் பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடவுசெய்து பராமரிக்க அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, நாமக்கல் கோட்ட பொறியாளா் நெடுஞ்சாலை குணா, உதவி கோட்ட பொறியாளா் நெடுஞ்சாலை நடராசன் மற்றும் உதவி பொறியாளா் மணிகண்டன் ஆகியோா் உடன் இருந்தனா்.