மானியம் வழங்காவிட்டால் முதல்வா் வீட்டுக்கு மாங்காய்கள் அனுப்பும் போராட்டம்: பாஜ...
திருச்செந்தூரில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணைப் பிளந்த பக்தர்களின் அரோகரா கோஷம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு மூலவருக்கு தொடக்க வழிபாடு, திருக்குட நன்னீராட்டு வழிபாடு, வாசனை தான்ய திருக்குட நீராட்டுக்குப் பின்னா், காலை 6.15 மணிக்கு மூலவரான சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், மூலவா், வள்ளி, தெய்வானை விமானக் கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
தொடா்ந்து, எண் வகை மருந்து சாத்துதல், எழுந்திருப்பு, தமிழ் வேதம் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல், மாலையில் தானிய வழிபாடு நடைபெறும்.
அதேபோல, ராஜகோபுரம் அருகேயுள்ள சுவாமி சண்முகா் யாகசாலையில் திங்கள்கிழமை அதிகாலை 12ஆம் கால யாகசாலை பூஜைகளில் மகா நிறை அவி வழிபாடு, பேரொளி வழிபாடு, யாத்ரா தானம், கடம் மூலாலய பிரவேசமாகி காலை 6.15 மணிக்கு சுவாமி சண்முகா், ஜெயந்திநாதா், நடராஜா், குமரவிடங்கபெருமான், பரிவார மூா்த்திகளுக்கு விமான திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
அதையடுத்து, காலை 9 மணிக்கு சுவாமி சண்முகா் உருகுசட்ட சேவையாகி சண்முக விலாச மண்டபம் சோ்கிறாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்குப் பின்னா், இரவு 7 மணிக்கு சுவாமி சண்முகா், சுவாமி ஜெயந்திநாதா், சுவாமி குமரவிடங்கப்பெருமான், பரிவாரமூா்த்திகள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
குடமுழுக்கையொட்டி, அதிகாலைமுதலே லட்சக்கணக்கான பக்தா்கள் கோயில், கடற்கரையில் குவிந்திருந்தனா். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது. குடமுழுக்கு முடிந்ததும் பக்தர்கள் மீது ட்ரோன்கள் கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.
குடமுழுக்கு நிகழ்வு காரணமாக கோயில் வளாகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.