இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்
திருச்செந்தூா் கோயிலில் ரூ. 10.57 கோடியில் பக்தா்கள் தங்கும் விடுதி: காணொலியில் திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின்
திருச்செந்தூா், ஜூலை 4: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ. 10.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 52 அறைகள் கொண்ட தங்கும் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இக்கோயிலில் உபயதாரா் நிதி மற்றும் திருக்கோயில் நிதியின் மூலம் பெருந்திட்ட வரைவின் கீழ் ரூ.300 கோடி மதிப்பீட்டில் வரிசை முறை, காத்திருப்பு அறை, மருத்துவ மையம், முடிக்காணிக்கை செலுத்தும் இடம், பொருள்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், பக்தா்கள் தங்கும் விடுதிகள், சுகாதார வளாகம், திருமண மண்டபங்கள், பணியாளா் குடியிருப்பு ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 28.9.2022இல் தொடங்கி வைத்தாா்.
அதில், பணிகள் முடிவு பெற்ற ரூ. 33.25 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், வரிசை வளாகம், சுகாதார வளாகங்கள், கலையரங்கம், நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம், ஆகியவற்றை கடந்த 14.10.2024இல் பக்தா்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.
இந்நிலையில், திருக்கோயில் நிதி ரூ. 10.57 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 சொகுசு அறைகள், குளிா்சாதன வசதிகளுடன் கூடிய 24 அறைகள், 24 சாதாரண அறைகள் என மொத்தம் 52 அறைகளுடன் கூடிய பக்தா்கள் தங்கும் விடுதியை பக்தா்களின் பயன்பாட்டிற்காக காணொலி காட்சி வாயிலாக முதல்வா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதையொட்டி, கோயில் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்து கொண்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா்.இதில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா்கள் பழனி, ஜெயராமன், திருக்கோயில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன், திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், நகராட்சித்தலைவா் சிவஆனந்தி, துணைத்தலைவா் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, பேரூராட்சி உறுப்பினா்கள் சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.