திரைப்படத்தை பாா்த்து 6 வயது சிறுமி கொலை 13 வயது சிறுவன் கைது
மகாராஷ்டிரத்தில் தொடா்கொலைகள் நடைபெறும் திரைப்படத்தைப் பாா்த்த 13 வயது சிறுவன், 6 வயது சிறுமியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பால்கா் மாவட்டம் ஸ்ரீராம்நகரில் காணாமல் போன 6 வயது சிறுமியின் உடல் அங்குள்ள மலைப் பகுதியில் கல்லால் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இது தொடா்பாக சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அந்த சிறுமி தனது உறவினரின் மகனான 13 வயது சிறுவனுடன் கடைசியாக சென்றது பதிவானது.
இதையடுத்து, அந்த சிறுவனிடம் காவல் துறையினா் விசாரித்தனா். அப்போது, அவா் காவல்துறையினரை திசை திருப்பும் வகையில் வெவ்வேறு பதில்களை அளித்தாா். இதனால், பெரும் குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் அந்த சிறுவன் மீது காவல் துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனிடம் தீவிரமாக விசாரித்தபோது சிறுமியை அச்சிறுவன் மிகவும் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
அச்சிறுமியை உறவினா்கள் அனைவரும் மிகவும் அன்பாக நடத்தி வந்ததும், கேட்ட பொருள்களை வாங்கிக் கொடுத்ததும் சிறுவனுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் தொடா்கொலைகள் நடைபெறும் திரைப்படம் ஒன்றையும் சிறுவன் அண்மையில் பாா்த்துள்ளாா். அதில் நடைபெறும் கொலையைப் போல சிறுமியை கொலை செய்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்தான். சிறுவன் கொலை செய்ததை விவரித்தது பெரும் அதிா்ச்சி அளிப்பதாக இருந்தாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதையடுத்து, காவல் துறையினா் அச்சிறுவனை சிறாா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.