தில்லிக்கு பிப். 5-ல் பொது விடுமுறை!
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அன்றைய தினம் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் நூறு சதவீத வாக்குப்பதிவை எட்டும் நோக்கத்தில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு பிப்.5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றுள்ளது. இன்று முதல் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கான வேலைகளைத் தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும் நூறு சதவீத வாக்குப்பதிவை எட்டும் நோக்கத்தில் பிப். 5ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிப்ரவரி 5ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதனால் அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், உள்ளூர் அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 2024-இல் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள்: மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்