தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி!
புது தில்லி: தில்லியில் யமுனை நதி அபாய அளவுக்கு கீழே பாய்கிறது.
யமுனை நதியில் எச்சரிக்கை குறி 204.5 மீட்டா். அதே நேரத்தில் ஆபத்து குறி 205.3 மீட்டா் ஆகும். மேலும், ஆற்றின் அருகாமையில் இருப்பவா்களை வெளியேற்றும் நடவடிக்கை 206 மீட்டரில் தொடங்குகிறது.
வியாழக்கிழமை காலை யமுனை நதியின் நீர்மட்டம் ஆற்றின் ஓட்டம் மற்றும் வெள்ள அபாயங்களை கண்காணிப்பதற்கான முக்கியக் கண்காணிப்பு புள்ளியில் அபாய அளவான 205 மீட்டராக இருந்தது.
கனமழை காரணமாக ஆற்றில் 1.78 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததால், ஹத்னிகுண்ட் தடுப்பணையின் 18 கதவுகளும் திறக்கப்பட்டன, இதன் விளைவாக ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்தது.
கடந்த சில வாரங்களாக நீர் மட்டத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான மாற்றத்தால் நிர்வாகம் விழிப்புடன் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முன்னதாக, புதன்கிழமை தில்லி முதல்வர் ரேகா குப்தா, நிரம்பி வழியும் யமுனை நதியின் நீர் நுழைந்த யமுனை நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர், நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது. புதன்கிழமை காலையில் நீர்மட்டம் 206 மீட்டரை நெருங்கியது, ஆனால் இன்னும் அபாய அளவைத் தாண்டவில்லை. தண்ணீர் ஓரிரு நாட்களில் குறையும். மேலும் தில்லியில் வெள்ளம் போன்ற சூழ்நிலை இல்லை என்றும், இரண்டு நாட்களுக்குள் நீர் மட்டம் குறையும் என்றும் உறுதியளித்தார்.
கண்காணிப்பு மற்றும் மேலாண்மைப்பு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. வெள்ளம் போன்ற சூழ்நிலையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீரை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விரும்புவோருக்கு தேவையான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்துள்ளது, அவர்களுக்கு தங்க இடம் மற்றும் உணவு வழங்குவதோடு, பாதிக்கப்பட்ட பகுதியில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குகிறது என்று அவர் கூறினார்.
முன்னதாக, கனமழை காரணமாக ஆற்றில் 1.78 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததால், ஹத்னிகுண்ட் தடுப்பணையின் 18 கதவுகளும் திறக்கப்பட்டன, இதன் விளைவாக நீர்மட்டம் உயர்ந்தது.
நீர்ப்பாசனத் துறையின் நிர்வாகப் பொறியாளர் விஜய் கார்க் கூறுகையில், "சமீபத்திய மழைக்குப் பிறகு ஆற்றில் 1.78 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துள்ளது. இது இந்த பருவத்தின் அதிகபட்ச நீர்மட்டம்" என்றார்.
தொடர் மழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது, மேலும் பல பகுதிகளில் வெள்ளம் போன்ற சூழ்நிலைகள் காணப்படுகின்றன.