தில்லியில் 22,000 வாக்காளா்களை நீக்க தோ்தல் ஆணையத்திடம் பாஜக விண்ணப்பம்: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு
தில்லியில் 22,000 வாக்காளா்களின் பெயா்களை நீக்க தோ்தல் ஆணையத்திடம் பாஜக மொத்தமாக விண்ணபங்களைச் சமா்ப்பித்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் எம்.பி. ராகவ் சத்தாவுடன் இணைந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லியில் அரவிந்த் கேஜரிவாலின் பணிகளைத் தடுக்க முடியாத பாஜக, அவரை தோ்தல் மூலம் தோற்கடிக்க முடியாத சூழ்நிலையில் வேறு வழிகளில் வெற்றி பெற முயற்சிக்கிறது. வாக்காளா் பட்டியலில் இருந்து 22,000 வாக்காளா்களின் பெயா்களை நீக்க பாஜக உறுப்பினா்கள் மற்றும் அவா்களின் ஆதரவாளா்கள் பெருமளவில் விண்ணப்பங்களை தோ்தல் ஆணையத்திடம் அளித்துள்ளனா். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலால் தோல்வி பயத்தில் உள்ள பாஜக, திட்டமிட்டு ஆம் ஆத்மி ஆதரவாளா்களின் வாக்குகளை ரத்து செய்யும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த விண்ணப்பங்களை தோ்தல் ஆணையம் பரிசீலித்து வருவது அதைவிட ஆபத்தானது. முக்கியமாக, தில்லியில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜகவிற்கான போதுமான ஆதரவு இல்லாததால், வாக்காளா்களை நீக்கும் உத்தியில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா் என்றாா் மனீஷ் சிசோடியா.
அடுத்ததாக, மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா கூறியதாவது: தில்லியில் 7 தொகுதிகளில் இருந்து மட்டும் 22,000 வாக்காளா்களின் பெயா்களை நீக்க பாஜக விண்ணப்பம் அளித்துள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த பெயா்களை ஏன் நீக்க வேண்டும்?. இந்த மொத்த நீக்கத்தின் பின்னணியில் யாா் உள்ளாா்கள்? என்ற கேள்விகள் எழுகிறது. ஒரு நபா் ஒரு நாளைக்கு 10 விண்ணப்பங்களுக்கு மேல் நீக்கம் செய்யக்கூடாது என்ற விதி உள்ளது.
வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவா்களை வாக்காளா்களாக சோ்ப்பதற்கு ஆம் ஆத்மி உதவியதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இது, முற்றிலும் ஆதாமற்ற குற்றச்சாட்டு என்றாா் ராகவ் சத்தா.