திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
தில்லி கேபிடல்ஸின் புதிய கேப்டன் யார்? கே.எல்.ராகுலா? அக்ஷர் படேலா?
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் அல்லது அக்ஷர் படேல் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் விளையாட பிரபல இங்கிலாந்து வீரருக்கு 2 ஆண்டுகள் தடை; காரணம் என்ன?
கே.எல்.ராகுலா? அக்ஷர் படேலா?
தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த், லக்னௌ அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார். அதன் பின், அந்த அணியின் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல்.ராகுல் தில்லி கேபிடல்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார். லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல்.ராகுல், தில்லி அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்புக்கு மற்றொரு போட்டியாளராக அந்த அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வரும் அக்ஷர் படேலும் இணைந்துள்ளார். கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்கவுள்ளதால், ராகுல் ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டங்கள் சிலவற்றில் விளையாட முடியாத சூழல் உள்ளது. இதனால், தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்புக்கு அக்ஷர் படேல் கடும் போட்டியாளராக உருவெடுத்துள்ளார்.
இதையும் படிக்க: கடந்த கால ஐசிசி நாக் அவுட் தோல்விகளிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம்: விராட் கோலி
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளை கேப்டனாக வழிநடத்திய அனுபவம் கே.எல்.ராகுலுக்கு உள்ளது. ஆனால், அக்ஷர் படேலுக்கு அணியை வழிநடத்திய அனுபவம் பெரிதாக இல்லை. கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னௌ அணி இரண்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதுவரை 132 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் 4,683 ரன்கள் குவித்துள்ளார். அதில் 4 சதங்கள் அடங்கும். கே.எல்.ராகுல் இதுவரை விளையாடியுள்ள 7 ஐபிஎல் தொடர்களில் 6 தொடர்களில் 500-க்கும் அதிகமாக ரன்கள் குவித்துள்ளார்.
31 வயதாகும் அக்ஷர் படேல் இதுவரை 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 1,653 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 123 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் அக்ஷர் படேலுக்கு கேப்டன் பொறுப்பு என்பது மிகவும் புதிது. ஆனால், கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் தன்னை கேப்டனாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தோல்வி: நியூசி. கேப்டன் கூறியதென்ன?
இவர்கள் இருவரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இன்னும் ஓரிரு நாள்களில் தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், அந்த அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.