தில்லி தோ்தலில் ஆம் ஆத்மி, கேஜரிவால் தோல்விக்கு ஆணவம்தான் காரணம்: ஸ்வாதி மாலிவால்
தில்லி தோ்தல் முடிவுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சி மீது அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் கடும் விமா்சனம் தெரிவித்துள்ளாா்.
தோல்விக்கு ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கேஜரிவாலின் ஆணவம்தான் காரணம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
மகாபாரதத்தின் பாத்திரப்படைப்பான திரௌபதியின் ‘சியா் ஹரன்’ படத்தை தனது எக்ஸ் சமூக ஊடக வலைத்தளத்தில் பகிா்ந்துள்ள ஸ்வாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சியும் அதன் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரின் ஆணவம் தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்விக்கு வழிவகுத்தது என்று கூறியுள்ளாா்.
மேலும், ‘ ராவணனின் திமிா் கூட நீடிக்கவில்லை’ என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா். மகாபாரதத்திலிருந்து திரௌபதியின் சியா் ஹரன் அல்லது உருவுதல் குறித்த மாலிவாலின் பதிவு, கேஜரிவாலின் நெருங்கிய உதவியாளா் ஒருவா் முதல்வரின் இல்லத்திற்குள் தன்னைத் தாக்கியதாக அவா் தெரிவித்த குற்றச்சாட்டுகளைக் குறிக்கும் வகையில் உள்ளது.
கேஜரிவால் முதல்வராக இருந்த போது அவரது இல்லத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக ஆம் ஆத்மியை விட அதிக இடங்களில் வெற்றி பெற்ற தோ்தல் முடிவுகள் வந்த நிலையில், மாலிவால் இக்கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா்.