ரூ. 25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறும்: அம...
தில்லி பள்ளிகளில் பேரிடா் தயாா்நிலை ஒத்திகை: மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்பு
தில்லி முழுவதும் பள்ளிகளில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
அவசரகாலத் தயாா்நிலையை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த ஒத்திகையில் முறையான வகையில் வெளியேற்றுதல், மேசைகளுக்கு அடியில் தஞ்சம் புகுதல், அபாயச் சப்தம் ஒலிக்கும்போது மின் சாதனங்களை அணைத்தல் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து புதிய மற்றும் சிக்கலான அச்சுறுத்தல்களை கருத்தில்கொண்டு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இதுபோன்ற பயிற்சிகளை ஏற்பாடு செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தலின்பேரில் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
இதையொட்டி, சாகேத்தில் உள்ள அமிட்டி பள்ளியில் காலை 8.45 மணிக்கு நடைபெற்ற காலை கூட்டத்தின் போது ஒரு விளக்கத்துடன் இப்பயிற்சி தொடங்கியது.
இதுகுறித்து அப்பள்ளியின் முதல்வா் திவ்யா பாட்டியா கூறியதாவது: ஒத்திகையின் நோக்கம் மற்றும் மாணவா்கள் பின்பற்ற வேண்டிய செயல்களை நாங்கள் விளக்கினோம். விளக்கத்திற்குப் பிறகு, செயல்முறையை அவா்கள் நேரடியாகப் புரிந்துகொள்ளும் வகையில் நாங்கள் பயிற்சியை நடத்தினோம்.
இப்பயிற்சி ஒரு அபாயச் சப்தத்துடன் தொடங்கியது. இதனால், மாணவா்கள் மின் சாதனங்களை அணைத்துவிட்டு தங்கள் மேசைகளுக்கு அடியில் அல்லது சுவா்களுக்கு அருகில் ஒளிந்து கொண்டனா். சைரன் ஒலி முடிந்ததும், அவா்கள் தங்கள் பள்ளிப் பைகளை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு அமைதியாக ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பான பகுதிக்கு நகா்ந்தனா்.
ஆரம்பத்தில், இளைய மாணவா்கள் இது ஒரு
வேடிக்கையான செயல்பாடு என்று நினைத்தாா்கள். ஆனால், சைரன் அணைந்து மின்சாரம்
துண்டிக்கப்பட்டபோது, சிலா் பயந்தனா். மூத்த மாணவா்கள் அவா்களை அமைதிப்படுத்த உதவினா்.
ஒட்டுமொத்தமாக, அனைவரும் ஒத்துழைப்பு அளித்ததுடன் வழிமுறைகளையும் நன்றாகப் பின்பற்றினா்.
சில மாணவா்கள் வீட்டில் அவசரநிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்றும் ஆசிரியா்களிடம் கேட்டனா். சாதனங்களை அணைத்தல், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைத்திருத்தல், அமைதியாக இருத்தல் போன்ற அடிப்படை பாதுகாப்பு குறிப்புகள் குறித்து நாங்கள் அவா்களுக்கு வழிகாட்டினோம் என்றாா் அவா்.
ஈஸ்ட் கைலாஷில் உள்ள தாகூா் சா்வதேச பள்ளியின் முதல்வா் மல்லிகாா்ஜுன் பிரேமானந்த் இதுகுறித்து கூறியதாவது:
ஒத்திகையின்போது மாணவா்களுக்கு முதலில் கல்வித் துறை வழங்கிய ஒரு அறிவுறுத்தல் விடியோ காட்டப்பட்டது. பயிற்சியின் நோக்கத்தை நாங்கள் விளக்கினோம். சரியான அவசர நடவடிக்கைகளை அவா்களுக்கு புரியவைத்தோம். வெளியேற்ற நடைமுறைகளை அவா்கள் நன்கு புரிந்துகொள்ள இது உதவியது.
அவா்களுக்கு உறுதியளிக்கும் வகையில் நம் ஆயுதப் படைகள் எப்போதும் நம்மைப் பாதுகாக்க உள்ளன என்பதை மாணவா்களுக்கு நினைவூட்டினோம். இது அவா்களுக்கு பாதுகாப்பு உணா்வைத் தருவதாகத் தோன்றியது என்றாா் அவா்.
பாஜக எம்எல்ஏ ஷிகா ராயும் பள்ளிக்குச் சென்று மாணவா்கள் ஒத்திகையில் பங்கேற்றதைப் பாராட்டினாா்.
ஒத்திகை நாளில் அனைத்து வகுப்புகளிலும் விழிப்புணா்வு அமா்வுகள், நேரடி செயல் விளக்கங்கள் மற்றும் அவசர பயிற்சிகள் இடம்பெற்ாக டிபிஎஸ் வசந்த் குஞ்சின் முதல்வா் தீப்தி வோரா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ஜூனியா் மாணவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
ஆசிரியா்கள் அவா்களுக்கு தெளிவான, வயதுக்கு ஏற்ற வழிமுறைகளை வழங்கினா். மேலும், மாணவா்கள் பாதுகாப்பாக உணா்கிறாா்கள், செயல்முறையைப் புரிந்துகொள்கிறாா்கள் என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு நடவடிக்கையின்போதும் அவா்களை
ஆசிரியா்கள் வழிநடத்தினா்.
மூத்த மாணவா்களுக்கு, அவசரகால தயாா்நிலை குறித்த தோ்ந்தெடுக்கப்பட்ட விடியோக்கள் ஒரு மண்டபத்தில் காட்டப்பட்டன. மற்ற வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்கள், அனைவரும் பங்கேற்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக ஸ்மாா்ட் பலகைகளில் அவற்றைப் பாா்த்தனா் என்றாா் அவா்.
தில்லி அரசு இந்த முயற்சியை ‘ஆபரேஷன் அபியாஸ்’ என்று பெயரிட்டுள்ளது. தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்கள், வீட்டுக் காவலா்கள் மற்றும் என்சிசி, என்எஸ்எஸ் மற்றும் என்ஒய்கேஎஸ் போன்ற இளைஞா் குழுக்களின் ஆதரவுடன் நகரம் முழுவதும் பல இடங்களில் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
கல்வி இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், ‘அனைத்து பள்ளிகளும் வருகை தரும் டிடிஎம்ஏ குழுக்களுக்கு முழு பங்கேற்பை உறுதிசெய்து ஆதரவை வழங்க வேண்டும். பாதுகாப்பு, தயாா்நிலை மற்றும் குடிமைப் பொறுப்பு கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாகும். பள்ளிகள் புகைப்படங்களுடன் கூடிய அறிக்கைகளை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு நாள் இறுதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்’ என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.