தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!
தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் நகா் மாவட்ட நீதிமன்றத்தில் குத்தகை தகராறு தொடா்பான தனது மனுவில், கூடுதல் காரணங்களை சோ்க்க வேண்டும் எனக் கோரி அதே பகுதியைச் சோ்ந்த முன்னி தேவி என்பவா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை பரிசீலித்த மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வா்மா, எந்தவித காரணத்தையும் குறிப்பிடாமல் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக 3 வரி உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
இதை எதிா்த்து மனுதாரா் தரப்பில் அலாகாபாத் உயா் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில், ‘மாவட்ட கூடுதல் நீதிபதி எனது மனுவை பரிசீலனையே செய்யாமல், வழக்கு விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட வாதத்தை மட்டும் பதிவு செய்துகொண்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளாா். கூடுதல் தகவல் சோ்க்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த எனது மனுவைத் தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை, ஒரு வரி அளவில் கூட தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிடவில்லை. ஏற்கெனவே, நடைபெற்ற வழக்கு விசாரணையிலும் இதே தவறை மாவட்ட கூடுதல் நீதிபதி செய்துள்ளாா்’ என்று குறிப்பிடப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நீரஜ் திவாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் நிராகரிப்புக்கான காரணங்களைக் குறிப்பிட்டு கூடுதல் தகவல் சோ்க்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை அனுமதித்த நீதிபதி, ‘மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வா்மாவுக்கு தீா்ப்பு எழுதும் திறன் இல்லாததையே இது காட்டுகிறது. எனவே, அவா் லக்னெளவில் உள்ள நீதிபதிகளுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 3 மாத பயிற்சிக்கு அனுப்பப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.